சனி, 29 செப்டம்பர், 2012

ஆரம்ப பாடசாலை நினைவுகள் - 1



கடந்த சில தினமாக பேஸ்புக்கில் இவரை உங்களுக்கு தெரியலாம் என்று காண்பிக்கும் பெயர்களில், என் சிறு வயது பள்ளி தோழியின் பெயரை பார்த்தேன், அவள் முகம் நினைவு இல்லை ஆனால் பெயர் மட்டும் நினைவில் இருப்பதால் அவள்தான என்றும் சரியாக தெரியவில்லை.

சரி அப்படியே பள்ளி நினைவுகளில் போய் வருவோம்

சென்னை திருவெற்றியூர் பகுதியில் இருக்கும் மெட்ராஸ் தமிழ் மிசன் பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். ஐந்து வயது இருக்கும்போதே என்னை பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.

இன்னைக்கு இருக்கும் மாதிரி அப்போ எல்லாம் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர் சிரமம் ஏதும் அடைய வேண்டாம். பள்ளிக்கு கொண்டு போனார்கள், தலைமை ஆசிரியர் முன் நம்ம வலது கையை தலைக்குமேல் கொண்டு சென்று இடது காதினை தொட்டால் ஆறு வயசு ஆனா ஆள என்று முதலாம் வகுப்பில் சேர்த்து கொள்வார்கள்.

அப்படி ஒருவருஷம் முன்னாடியே என்னை கொண்டு போய் சேர்த்துட்டாங்க, ஒரு கரும்பலகை, ஒரு புத்தகம், இதுதான் அன்னைக்கு ஒன்னாம் வகுப்பிற்கு தேவை.எல்லாம் வாங்கி முதல் நாள் பள்ளிக்கு போயாச்சி, பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை. தினமும் பள்ளிக்கு போய்கிட்டு இருந்தேன்.

ஒரு நாள் தேர்வு நடந்தது, ஆசிரியர் சொல்லுவதை நம் கரும்பலகையில் எழுதணும், பின்னர் அவர் பார்த்து மதிப்பெண் போடுவார், தப்பா எழுதின இரண்டு உதைபோடுவார். ஆசிரியர்கள் எல்லாருமே தாய்குலங்கள்தான். அதனால் உதை அவ்வளவு கடினமா இருக்காது.

என்னுடைய விடையை திருத்துமுன் மணி அடிக்க, எங்கள் ஆசிரியர் கிளம்பிட்டார், பள்ளியும் முடிந்துவிட்டது. எனக்கு ஒரே அழுகை, வீட்டிற்கு போனால் அப்பா என்ன சொல்லுவர் என்று பயம்.

அதே அழுகை முகத்துடன் பள்ளிக்கு வெளியே வந்தேன், என் அண்ணனும், சின்ன அக்காவும் அதே பள்ளியில்தான் படிக்கிறாங்க அப்போ, என் அழுகை முகத்தை கண்ட என் அண்ணன் என்ன விஷயம் என கேட்க, விவரத்தினை சொன்னேன்.

அவ்வளவுதானா என கேட்டு, என் பலகையை வாங்கி அவனே மதிப்பெண் போட்டான், சந்தோசமா வாங்கி வீட்டுக்கு கிளம்பினோம், வீட்டுக்கு போகும் வழியில்தான், அப்பாவின் தையல் கடை, கடைக்கு போய் என் மதிப்பெணை காட்டினேன். அதை பார்த்தவுடன் தந்தையின் முகம் மாறியது................

எதுக்கு? 

தொடரும்



கருத்துகள் இல்லை: