செவ்வாய், 24 ஜனவரி, 2012

முகமூடி


நல்மனித இயல்பை நசுக்கி 
என் இருப்பை தொலைத்த
எனக்கு
ஊர் முன் உத்தமனாக நடிக்க வேண்டி ,  
காலத்தால்
எனக்கு ஒரு கட்டாயம் வந்தது

அதனால்,
அகத்தின் அழுக்கை, என் முகத்திரை
முத்திரையிட்டு காட்ட வண்ணம்
மூடி மறைத்திட
முனைப்புடன், 
தேடினேன் ஒரு முகமூடி


உண்மையற்ற வார்த்தைகள் பேசி
உவர்த்து போன என் வாயினை
உண்மையின் உறைவிடமாக்கி
உலகிற்கு,   
காட்ட உடனே வேண்டும் ஒரு முகமூடி

கெட்டதை மட்டும் நோக்கி கெட்டழிந்த, 
என் கண்களை, கண்ணியம் நிறைந்து
கனிவு காட்டும் கண்களாக காட்டிட
கடினமாய் தேடினேன் ஒரு முகமூடி

இன்சொல் கேட்க மறுத்து
மரத்துப்போன என் காதுகளை
எம் மாந்தருக்கு மாற்றி காட்ட
மறைவாய் தேடினேன் ஒரு முகமூடி
 
மூர்க்கமுடன் தேடியும் மூகமுடிகள் 
கிடைக்காத நிலை,
என்ன செய்வது,
ஏது செய்வது, ஏதும் புரியாமல்
குழம்பி போய், குறுகி கிடந்த சமயம்

உண்மையின் வெளிச்சம்,
என்னில் ஒளிவிட தொடங்கியது

பொய்மையின் பின்னால் போனால்
பல நூறு முகம் வேண்டும்,
ஆனால்
உண்மை பாதையில் உவப்புடன் நடக்க 
எனக்கு  ஒரு முகமே போதும் என்று

எண்ணத்தில் எழுந்த மாற்றத்தால்
நடிப்பிற்கு நல்லவனாக இருப்பதை தவிர்த்து, 
முகமூடி தேடும் என் முட்டாள், 
பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து    


எண்ணம், செயல்,
அனைத்திலும்
உண்மை மனிதனாக மாற 
உவகையுடன்
தொடங்கினேன்
என் புது முயற்சியினை................ 

கருத்துகள் இல்லை: