திங்கள், 18 பிப்ரவரி, 2013

பரபரப்பு





கிறிஸ்மஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகள் எங்கள் தேவலாயத்தில் எல்லா ஆண்டும் டிசம்பர் 9, இல்லை 10ம் தேதி தொடங்கும். ஆலயத்தினை சேர்ந்த குடும்பங்களில் சென்று கிறிஸ்து பிறப்பு பாடால்களை பாடும் கேரல்ஸானது இதன் ஒரு பகுதியாகும்.

அப்படி மெதுவாக தொடங்கும் பண்டிகை கால உற்சாகம், மெல்ல, மெல்ல கூடுதல் ஆகி டிசம்பர் 21 முதல் 24 வரை உச்சக்கட்டத்தினை அடையும். அதுவும் 22 முதல் 24 மாலை வரை எங்களின் ஓட்டமானது மிக அதிகமாக இருக்கும். இந்த மூன்று நாட்களும் ஆலயம் அலங்காரம், மற்ற ஏற்பாடுகள், ஆலயத்தில் குடில் அமைப்பு என ஜெட் வேகத்தில் பறக்கும்.

அதுவும் 24ம் தேதி அன்று வேலைகள் எல்லாம் செய்து, அன்று இரவு கிறிஸ்மஸ் திருப்பலிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து முடித்து, வீட்டிற்க்கு போய் குளித்து புதிய உடைகள் அனித்து இரவு திருப்பலிக்கு வரும் அந்த சமயம் எப்படிதான் ஓடும் என்றுதெரியாது.

திருப்பலி எல்லாம் முடிந்து எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி வீடு வந்து சேர எப்படியும் இரவு 2, 3, மணி ஆகிவிடும், பின் ஒரு 2 மணி நேரம் உறங்கி காலையில் எழுந்து அக்கம், பக்கம் இருப்பவர்களுக்கு இனிப்பு, கேக் எல்லாம் கொடுத்து நம் மகிழ்ச்சினை பகிர்ந்து வருவதற்க்குள், மதிய உணவு நேரம் வந்துவிடும்.

சுவையான மதியவிருந்தினை உண்டு விட்டு ஒரு தூக்கம் போட்டுவிட்டு வந்தோம் என்றால் மாலை பொழுது கண்சிமிட்டிக்கொண்டு, பரபரப்பு எல்லாம் அடங்கி, ஒருவித அமைதியான பொழுதாக இருக்கும்.

கையில் ஒரு குவளை தேனீரும், சில தின்பண்டங்களுமாய் அமர்ந்து யோசிக்கும் பொழுது கடந்த 15 நாட்களின் ஓட்டம் மெல்ல மனதில் ஓட, மீண்டும் இந்த ஓட்டம் ஓட இன்னும் 1 ஆண்டு காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் நினைப்பு வர மெல்லிய புன்னகை உதட்டில் தோன்றும். 

பின்னர் எழுந்து முகம் கழுவி, மீண்டும் ஆலயத்திற்க்கு போனால் நேற்றைய பரபரப்பு எல்லாம் முடிந்து, ஆலய வளாகமே அமைதியாக இருக்கும், ஆலய குடிலில் இருக்கும் மெழுகுவர்த்திகள் மெல்லிய ஒளி எழுப்பி காற்றுடன் மெதுவாக பேசிக்கொண்டு இருக்கும்.

எல்லா பரபரப்புக்கும் பின் இப்படி ஒரு அமைதி இருக்கும் என்ற உண்மை அப்பொழுது புரியும்.

இப்பொழுது நான் வாழும் வாழ்க்கையும் அப்படி பரபரப்பாகதான் போய்க்கிட்டு இருக்கு, என்று அந்த மெழுகுவர்த்திகள் போல் அமைதியாய் இருக்கும் நாள் வரும் என காத்திருப்புடன்.........................

கருத்துகள் இல்லை: