புதன், 1 பிப்ரவரி, 2012

வல்லமை பொங்கல் சிறப்பிதழில் நான் எழுதிய கவிதை


மனம் எனும் மாயப்பெட்டகம்

கண்ணில் தெரியா மனித மனதில் இறைவனும் எண்ணி, எண்ணித் தோற்ற
எண்ண முடியா எத்தனை ரகசிய அறைகள்


எண்ண முடியா ரகசிய அறையில்
பொத்தி வைத்துப் பூதம் காப்பதுபோல்
மறைத்து வைத்த எத்தனை எண்ணங்கள்


எண்ணங்களை எண்ணிக்கைப் படுத்த
இயன்றவரை முயலுவோம் என
எடுத்து வைத்தேன் ஏடு ஒன்றை.


வகைக்கு ஒன்றாக
வலம் வந்தவை இதோ,


பொறாமைத் தீயினால் பொசுங்கிப் போய்
மற்றவரை ஆள முடியா ஆற்றாமையால்,
அழுது புலம்பும் அழுக்கானவை.


நட்பின் நம்பிக்கையை நசுக்கிப் பார்க்கும்
நல்லிதயம் இல்லா நாற்றம் கொண்டவை
மூர்க்கத்தினை மட்டுமே மூளையில் கொண்ட
முடமான  குணம் கொண்டவை.


அகத்தில் வெறுத்து, புறத்தில் சிரிக்கும்
புதை மணலின் நிலை கொண்டவை
அழுக்காறு கொண்டு புறம் பேசும்
நச்சுப் பாம்பின் பிரதிபிம்பங்கள் .


வகைக்கு ஒன்றாய் வலம் வந்த பின்
மனம் எனும் மாயப் பெட்டகம், தன்னுள்,
பொதித்து வைத்த பொதி மூட்டையில்,
மெல்ல எட்டி நான் பார்க்க,



அதில் சீறும் புலியின் சீற்றத்துடன்
தன் இருப்பை நிலை நிறுத்தும்
இடைவிடாப் போராட்டத்தில்
இருந்தது நல்லெண்ணம்


இத்தனை நச்சுப் பொதிகையில் நடுவே
நீ இருந்தும், மூழ்காமல் முழுமையாய்
இருக்கும் சாத்தியம்  எப்படி எனும்
ஐயப்பாட்டினை அதனிடம் கேட்க



அதற்கு மறுமொழியாக
மனித மனம் எல்லாவற்றிலும்
இணை பிரியா இருப்பு நான்


மனங்களில் என் இருப்பின் அளவில்
ஏற்றத் தாழ்வுகள் இருக்குமே தவிர
இருப்பில்லா நிலைக்கு என்றுமே
நான் இருந்ததில்லை


பல நச்சு எண்ணங்களால்
மூச்சுத் திணறும் சில முழு மனதும்,
உயிர் மூச்சுப் பெறுவது இதனால்தான் என
விடை சொல்லி எனக்கு விடை கொடுக்க


இறைவனின் படைப்பில் இப்படியும்
ஒரு நிகழ்வு இருப்பதனால்தான், மனிதம்
இன்னமும் மறையாது இருக்கிறது என்ற,

எண்ணத்துடன் எடுத்து வைத்தேன் என் ஏட்டினை.

http://www.vallamai.com/special/pongal/pongal-2012/1100/

கருத்துகள் இல்லை: